புதிதாக நியமிக்கப்பட்ட 1,675 இடைநிலை ஆசிரியர்களும் 8ம் தேதி பணியில் சேர வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு - தினகரன்:
தொடக்க கல்வித்துறையால் நியமனம் செய்யப்பட்ட 1675 புதிய இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர் 8ம் தேதி பணியில் சேர வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மொத்தம் 1675 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளூர் காலியிடங்களுக்கு 3ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு 4ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சேர்ந்த பணி நாடுநர்கள் 1ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம்.
வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு பணி ஒதுக்கீடு ஆணை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன. எனவே இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நியமன ஆணை வழங்கும் பணியை தகுந்த இடவசதி உள்ள பள்ளிகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல் முடிந்ததும் நியமன ஆணை வழங்கப்பட்டு ஆணை பெற்றவர்கள் செப்டம்பர் 8ம் தேதி பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment