பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சியை தந்த பள்ளிகள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-திரு.வெ.இறையன்பு IAS அவர்கள்:
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சியை தந்த பள்ளிகள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா A.R. Engineering College.Vadakuchipalayam, Kappiyampuliyur Villupuram இல் காலை 10:30 மணியளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்க்ஸ் எம்.எஸ்.ஸி,எம்.பில்,எம் எட்.அவர்கள் தலைமையில் தமிழ்த்தாய்வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது.இந்த நிகழ்விற்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஆட்சியர் திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கள்ளகுறிச்சி,விழுப்புரம்,திண்டிவனம் என மூன்று கல்வி மாவட்ட ஆசிரியர்களும் சுமார் 2000 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.முதல் நிகழ்வாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.பின்னர் சிறப்பு விருந்தினர் திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் ஆசிரியர் பணிக்குறித்தும்,இந்த ஆண்டு இம் மாவட்டம் 100% தேர்ச்சி விழுக்காட்டை பெறுவதற்கு ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மிக அருமையாக தனது சொல் ஆற்றலால் 2000 ஆசிரியர்களையும் மெய்மறக்க செய்தார்-அவற்றுள் சில உங்களின் பார்வைக்கு, ஆசிரியர் என்பவரை சிலர் ஏணி என்பார்கள்,சிலர் தோனி என்பார்கள் நான் அவ்வாறு அழைக்கமாட்டேன் காரணம் ஏணி ஒருவர் ஏறுவதற்கும் பயன்படுகிறது இறங்குவதற்கும் பயன்படுகிறது,தோனி கடப்பதற்கும் பயன்படுகிறது,திரும்புவதற்கும் பயன்படுகிறது.ஆனால் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் வாழ்க்கையை ஏற்றுவதற்கு மட்டுமே பயன்படுகிறார்கள்.இறங்குவதற்கு அல்ல எனவேதான் நான் ஆசிரியர்களை கேணி என்பேன்-அதாவது தொட்டனைத்தூரும் மணற்கேணி போன்று என ஆசிரியர் பணிக்கு அழகான இலக்கணத்தை தந்தார்.
ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் மனசாட்சியின் படி பணியாற்றவேண்டும் என்பதனை எத்தனையோ தனியார் பள்ளி ஆசிரியர்கள் தனியார் ஒருவரின் நீச்சல் குளத்தை நிரப்புகிறார்கள்,ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே ஏழை குழந்தைகளின் வயல் வெளியை நிரப்புகிறார்கள் என்று அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பெருமையை உணர்த்தினார்.ஒவ்வொரு மாணவனையும் ஊக்கப்படுத்தி அவனது திறமைகளை வெளிக்கொணர வைத்தல் ஆசிரியரின் கடமை என்பதை அழகாக-ஒவ்வொரு மாணவனையும் புலிக்கு பயந்து ஓடும் யானைகளாக இல்லாமல் போர்க்களத்தில் முன்னோக்கி செல்லும் களிறு ஆக மாற்றவேண்டும் என்றார்.ஒரு சிறந்த மாணவன் என்பவன் மதிப்பெண்களை விரும்பமாட்டான், பாடத்தை மட்டுமே விரும்புவான் என்றும் மதிப்பெண்களை பெரும் மாணவர்களை உருவாக்குவதைவிட ஒழுக்கத்திலும் ,பண்பிலும் சிறந்து விளங்கும் தலைசிறந்த மாணாக்கர்களை உருவாக்குங்கள் அதுவே இந்த தேசத்திற்கு இப்பொழுது தேவை என்றார்.நல்லது நடக்கும் என்ற நல்ல எண்ணத்தோடு உழைப்போம் நல்லதே நடக்கும்- Power of Positive Expectation என்ற எண்ணத்தோடு தினந்தோறும் வகுப்பறைக்கு செல்லுங்கள் நிச்சயம் இந்த ஆண்டு இம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் 100 என்பதில் மாற்றம் இல்லை என தன்னுடைய உரையினை முடித்தார்.எத்தனையோ உதாரணங்கள் ,சாதனையாளர்களின் சரித்தரங்கள் ,என மடைதிறந்த வெள்ளம் போல் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய அவரது உரையினை கேட்டு ,புது தெம்புடனும் ,உற்சாகத்துடனும் ,ஆசிரியர்கள் காணப்பட்டனர்.நிகழ்ச்சியின் அடுத்த நிகழ்வாக 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் ,100%,90%க்கு மேல் தேர்ச்சியை தந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் ,நற்சான்றிதழ்களை வழங்கினார் ,இறுதியாக முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் திரு .சண்முகம் அவர்கள் நன்றி தெரிவித்தார் .தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது-என்றும் ஆசிரியர் நலனில் கல்விக்குரல் ..
Comments
Post a Comment